en
Feedback
Tamil Stories தமிழ் கதைகள்

Tamil Stories தமிழ் கதைகள்

Open in Telegram

தன்னம்பிக்கை நம்பிக்கை சிறுகதை குட்டிக்கதை நகைச்சுவை ஞானம் மகிழ்ச்சி மனஅமைதி நீதி கருத்து எண்ணம் வாழ்க்கை புன்னகை அன்பு மனஉறுதி விடாமுயற்சி மாற்றம் உற்சாகம் Tamil spiritual Humor positive Change Bliss Fun Peace Thoughts Feelgood Smile short story

Show more
5 991
Subscribers
No data24 hours
-27 days
-930 days
Posts Archive
கதை #S960 எதிர்வினை இல்லை என்றால் ஒரு பைத்தியக்காரன் மீது கருணைக் கொண்ட சீடன், அவரை தனது மடாலயத்து குருவிடம் அழைத்துச் சென்றான். குரு சொன்னார், ”அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள். உணவையும், நீரையும் அருகில் வையுங்கள். ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம். பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார். அவருக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வேண்டாம், நீங்கள் யாரும் கண்டுக் கொள்ளவும் வேண்டாம்,” என்றார். அவர் கத்தினார், கற்களை வீசினார். அவரை யாரும் அங்கு கண்டுக் கொள்ளவில்லை. சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர். அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது. நாட்கள் நகர்ந்தன, ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், ”எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா.?” என்று கேட்டான். எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகிவிடுகிறார் மற்றவர்கள் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்துக் கொண்டே போகாது தர்க்கம் பண்ணாதீர்கள். நம்முடையப் பேச்சே தர்க்கத்திற்கு தீனி! நம் அமைதியே அதற்கு பட்டினி! அமைதியாக இருங்கள், எல்லாம் சரியாகும். ஒரு வேளை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை! நீங்கள் சரியாக இருப்பீர்கள்,

கதை #S959 உனக்குத் தேவை என்பதால் பார்வையற்றவரான தனது நண்பரைச் சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றார் ஒருவர். அவர் சென்றது இரவு நெருங்கும் மாலை நேரம். “இந்த நேரத்தில் வந்து உன்னைச் சங்கடப்படுத்துகிறேன்" என்று அதற்காக வருந்தவும் செய்தார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியோ, தன் நண்பரை வரவேற்று ஹாலில் அமரவைத்துவிட்டு மின் விளக்கின் சுவிட்சை ஆன் செய்தார். வந்த நண்பரோ, "எதற்காக லைட் போட்டாய்? உன்னால்தான் பார்க்க முடியாதே" என்று சாதாரணமாகக் கேட்டுவிட்டுச் சிரித்தார். பார்வையற்ற நண்பரும் அவருடன் சேர்ந்து சிரித்துவிட்டுச் சமையலறைக்குச் சென்றார். தானே தேநீர் போட்டு, நண்பருக்காகச் சில பிஸ்கெட்டுகளும் எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார். அவர் வீட்டில் எல்லாமே அவர் வசதிக்கு ஏற்றபடி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பதால், மிகச் சரியாக அவற்றை ஹாலிலுள்ள டேபிளில் வைத்தார். நண்பரைத் தேநீர் குடிக்கச் சொல்லி உபசரித்தார். பிறகு அவர் ஆழமான ஒரு கருத்தைச் சொன்னார். அது வந்த நண்பருக்குக் கண்ணீரை வரவழைத்தது. "எனக்குத் தேவை என்பதற்காக விளக்கைப்போடவில்லை. என்னைப் போன்ற ஒருவனுக்கு அது தேவையும் இல்லை. ஆனால், உனக்குத் தேவை என்பதால் விளக்கை ஆன் செய்தேன்” என்றார். வந்த நண்பர் சங்கடத்துடன் நெளிந்து, "நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்று சமாளிக்க முயன்றார். பார்வையற்ற நபர், ஆழமானதொரு கேள்வியைத் தன் நண்பரிடம் கேட்டார். "எனக்கு வெளிச்சம் தேவையில்லை என்பதற்காக இந்த விளக்கை அணைக்கமாட்டேன். ஆனால், உனக்கு வெளிச்சம் தேவையில்லை என்பதற்காக மற்றவர்களுக்கான வெளிச்சத்தை அணைத்துவிட்டு, வெளிச்சத்தைப் பார்க்கும் வாய்ப்பை அவர்களுக்கு நீ எப்போதாவது மறுத்திருக்கிறாயா?” என்பதே அந்தக் கேள்வி.

கதை #S958 பகைவனுக்கு இடம் மரத்தில் பெரிய பருந்து ஒன்று அமர்ந்திருந்தது. வயதும் ஆகிவிட்டதால், அதனால் முன்னர் போல் வேகமாகப் பறந்து, சிறிய பறவைகளைப் பிடிக்கவில்லை. இதனால் யோசனை செய்தது. மனதில் ஒரு நல்லவழி தோன்றியது. பறவைகள் அப்பகுதியில் வரும் நேரத்தில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது. அப்பொழுது புறாக்கூட்டம் ஒன்று பறந்து வந்து. அங்கு அமர்ந்தன. புறாக்கள் அசைவற்று அமர்ந்திருந்த பருந்தினைப் பார்த்தன. பருந்தின் அருகில் ஒரு புறா சென்றது.”ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய்” எனக் கேட்டது. “நான் நிறைய பாவங்கள் செய்து விட்டேன். இனி மேல் பாவங்களே செய்ய மாட்டேன் என ஆண்டவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்றபடி கண்ணீர் விட்டது. அதன் பேச்சையும், கண்ணீரையும் உண்மை தான் என நம்பிவிட்டன. புறாக்கள் அனைத்தும் அதற்காக பரிதாபப்பட்டன. அவைகளின் மனம் இரக்கப்பட்டன. “நான் செய்த பாவங்களுக்கு பரிகாரமாய் உங்களுடன் இருந்து, எப்பொழுதும் உங்களுக்கு காவலாய் இருப்பேன்” என்றதும் புறாக்கள் மகிழ்ச்சி அடைந்தன. பருந்து சொல்வதும் உண்மை தான் என நம்பின. வயதான காலத்தில் பருந்து திருந்தி இருக்கலாம். எனவே அதை நாம் ஏற்றுக் கொள்வதே நன்மை எனவும் முடிவு செய்தன. அனைத்தும் ஒன்று கூடி முடிவு செய்தததினால், பருந்தை தம் இடத்திற்கு அழைத்துச் சென்றன. பருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் புறாக்களின் இருப்பிடம் அடைந்தது. அங்கு இருந்த நிறையப் புறாக்களைக் கண்டதும், தனக்குள் ஒரு முடிவு எடுத்தது. “புறாக்களே, உங்களிடம் நான் ஒன்று கூறவும் மறந்து விட்டேன்.” “என்ன அது சொல்” என்றன. “உங்கள் சமுதாயத்துக்கு நான் காவலாக இருப்பேன் என்றாலும், என் வயிற்றுப் பசிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் தானியங்களை நான் சாப்பிட மாட்டேனே” எனக் கூறிச் சிரித்தது. “அதற்கு எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்” “பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், ஒரு வேளைக்கு ஒரு புறா மட்டும் தாருங்கள், அதைச் சாப்பிட்டு பசியாறிக் கொள்கிறேன்.” பருந்து இப்படிக் கூறியதும் தான், தாங்கள் அவசரப் பட்டு தவறு செய்து விட்டோம் என உணர்ந்தன. பகைவனுக்கு இடம் கொடுத்தால் உள்ளதும் போய் விடும்

கதை #S957 எல்லாமே எனக்குத்தான் பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின. இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின. அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும். " கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது. இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது. துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

கதை #S956 திரும்பத் திரும்ப ஒருநாள் அந்த குரு மக்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். இடையிடையில் கதைகள் நகைச்சுவை துணுக்குகள் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் ஒரு நகைச்சுவைக்கு மக்கள் அனைவரும் விரும்பி விழுந்து சிரித்தனர். மறுபடியும் அந்த நகைச்சுவையை சொன்னார்! இப்பொழுது பாதி பேர் மட்டும் சிரித்தனர். மூன்றாவது முறை மறுபடியும் அதே நகைச்சுவை சொல்ல அரங்கத்தில் ஒரு மூன்று நான்கு பேர் மட்டும் சிரித்தனர். கடைசியாக நான்காம் முறை சொல்ல ஒரே நிசப்தம்! இப்போது அந்த குரு அங்கிருந்து மக்களை நோக்கிஒரு நகைச்சுவைக்கு மறு முறை சிரிக்காத நாம் ஒரே கவலையை எண்ணி மட்டும் தினமும் துன்பப்படுவது எதற்கு?” என்றார். கடந்து போன கவலை மட்டுமே திரும்பத் திரும்ப நினைத்தால் கவலை மேலும் அதிகரிக்கும். ஆனால் பழைய சந்தோஷ நிகழ்வுகளை நிகழ்வுகளை நினைத்தால் சிறிது சிறிதாக அதன் தன்மை குறையலாம்.

கதை #S955 இம்பார்டண்ட் விஷயம் ஒரு நாள் காலையில சாப்பிட்டு விட்டு மொபைலில் விளையாடிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன் மணி சுமார் 11.30 இருக்கும். காலிங் பெல் அடித்தது. திறந்தால், ”எக்ஸ்க்யூஸ் மி” என்று ஒரு பெண் நின்றிருந்தாள். இப்போதெல்லாம் பெண்கள் வாசலில் வந்து விற்காத பொருளே இல்லை. மதம் உள்பட எல்லாமே விற்கிறார்கள். ”யா. யு ஆர் எக்ஸ்க்யூஸ்ட்” என்று கதவைத் திரும்ப சாத்தப் போனான். “அதில்ல சார். கேன் யு ஸ்பேர் டூ மினிட்ஸ்?” “கரெக்டா டூ மினிட்ஸ்தான்” என்றேன் கறாராக ராக்கெட் லாஞ்சிங்கைப் பாதியில் விட்டு வந்தவன் போல. ஆக்சுவலாய் என்ன செய்வதென்று தெரியாமல் மோவாயைச் சொறிந்து கொண்டிருந்த போதுதான் பெல் அடித்தது. “ஓக்கே சார். திஸ் ஈஸ் என் இண்டரஸ்டிங் ஸ்கீம். மாசம் ஃபைவ் தௌசண்ட் வீதம் பத்து வருஷத்துக்கு கட்டினீங்கன்னா அதுக்கப்புறம் லைஃப் பூரா மாசம் ஃபைவ் தௌசண்ட் கிடைக்கும்” இதென்ன பெரிய்ய இந்த ஸ்கீம்? இதை எந்தக் கழுதையிடம் கட்டினாலும் அதால் இந்த மாதிரி திருப்பித் தர முடியுமே! “இண்டரஸ்டிங். ஆனா எனக்கு அவசியமில்லை” “திஸ் ஈஸ் அ ரிடயர்மெண்ட் பிளான் சார்” “கரெக்ட். ஆனா எனக்கு பிரயோஜனப்படாது” “எவ்வளவு நாள் உழைப்பீங்க சார்? ரிட்டயர் ஆக வேண்டாமா?” “ஆகத்தான் வேணும். அதுக்கு ஒரு விஷயம் ரொம்ப இம்பார்டண்ட் ஆச்சே” “என்னது சார்?” “எங்கயாவது வேலைல இருக்கணுமே?”

கதை #S954 முதல் வகுப்பில் இடம் விமானத்தில் வெள்ளை நிற பெண் ஒருவள் ஒரு கருப்பர் அருகில் அமர்ந்திருந்தாள். அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து கருப்பான மனிதரின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி கருப்பான மனிதரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டவளாக, ”முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும் எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்.” என்று கூறி முடித்தாள். சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச் சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள். சரியாக அச்சமயம் பணிப்பெண் கருப்பான மனிதரைப் பார்த்து, “சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள். விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றார்.” என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப்பெண்ணைப் பாராட்டினர். அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும். தலைமை விமானியும் நிறுவனத்தின் அதி உயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊளியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது. மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!

கதை #S953 அழகான வீடு ஒரு அழகிய வீடு இருந்தது. ஆனால் அதில் வாழ்ந்து வீட்டு உரிமையாளருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவ்வீடு எவ்வளவோ அழகாக இருந்தும், அந்த வீட்டிலேயே நெடுநாட்கள் வாழ்ந்து விட்டதால், அவருக்கு அலுப்புத் தட்டி விட்டது. அந்த வீட்டில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. ஒரு அழகான நீச்சல் குளம் இருந்தது. அப்படி இருந்தும் அலுப்புத் தட்டி விட்டது. அவர் ஒரு வீட்டுத் தரகரைக் கூப்பிட்டு, “வீட்டை விற்று விட விரும்புகிறேன். இதில் வாழ்ந்து சலித்துவிட்டது. இந்த வீடு இப்பொழுது எனக்குப் பிடிக்கவில்லை. உடனே விற்க விரும்புகிறேன்” என்று சொன்னார். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அந்த வீட்டுத் தரகர் அவ்வீட்டைப் பற்றி மிக அழகான வீடு விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் கொடுத்து இருந்தார். வீட்டு உரிமையாளர் செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்து மீண்டும் மீண்டும் படித்தார். பிறகு அவர் வீட்டுத்தாகருக்கு தொலைபேசியில் சொன்னார் "என் வீட்டை விற்க வேண்டாம்.” உங்கள் விளம்பரம் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இம்மாதிரி வீட்டுக்குத்தான் நான் நெடு நாட்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய வீட்டில் இவ்வளவு அழகிய விஷயங்கள் இருப்பதை உங்களுடைய விளம்பரம் பார்த்து அறிந்து கொண்டேன். நான் ஏங்கிக் கொண்டிருந்த அதே வீட்டில்தான் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்கள் விளம்பரம் என்னை திருப்திப்படுத்தி விட்டது என்றார். இருப்பதில் திருப்தி அடையாதவர்கள் எதிலுமே திருப்தி அடைய முடியாது.

கதை #S952 தத்துவம் வீட்டில் ஏற்பட்ட அன்றைய தகராறு கடைசியில் அடிதடியில் போய் முடிந்தது. கணவன் அடித்துவிட்ட கோபத்தில் தன் அம்மா வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்ட மனைவியை நினைத்து வருத்தப்பட்ட கணவன், இப்போது மனைவிக்கு ஃபோன் செய்து, "கோபத்தில் அடித்து விட்டேன். மன்னித்து விடு. நீ இல்லாமல் என்னால் வாழவே முடியவில்லை. திரும்பி வீட்டுக்கு வா. நாம் சேர்ந்து வாழலாம்.” என்றான். இதுதான் கணவனுக்கு பாடம் புகட்ட சரியான சமயம் என்று நினைத்த மனைவி கணவன்யிடம் சொன்னாள். "டேபிள்ல ஒரு கப் இருக்கா பாருங்க.!" திரும்பி டைனிங் டேபிளைப் பார்த்த கணவன் சொன்னான், "ஆமா... இருக்கு.!" மனைவி இப்போது சொன்னாள், "அந்தக் கோப்பை எடுத்து ஓங்கி பலமா தரைல வீசுங்க.!" கணவன் சொன்னான், " இதோ நீ சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன் உடனே கிளம்பி வா!" மனைவி இப்போது பொறுமையாய் சொன்னாள். "இப்போது கீழே உடைந்து கிடக்கும் அந்த உடைந்த கப்பை உங்களால் மீண்டும் ஒட்ட வைக்க முடியுமா? அப்படித்தான் என் மனமும் ஒருமுறை உடைந்தால் மீண்டும் ஒட்டாது!" மனைவி சொன்னதும் எந்த உணர்ச்சியும் கணவன் சொன்னான். "நான் வீசுனது பிளாஸ்டிக் கப்புடீ. அது உடையவே இல்லை!" என்றான் “சரி சரி ஈவினிங் வந்து கூட்டிக்கிட்டு போங்க!” என்றாள் மனைவி. உடனே அதற்கு “எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக்கூடாது. "நீ படிச்ச அந்த புக் இந்த ஊர்லயும் விக்குதுடீ! என் செல்லம் " என் கணவன் சொன்னான்.

கதை #S951 உப்பு காபி ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின் அழகில் மயங்கினான் அவன். இதயம் துடிக்க, கைகால்கள் படபடக்க. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு. பேச்சும் வர வில்லை. சர்வரை அழைத்து, “காபிக்கு கொஞ்சம் சர்க்கரை கொண்டுவா” என்று சொல்ல நினைத்தவன், நாக்கு குழறி “கொஞ்சம் உப்பு கொண்டு வா” என்றான். சர்வர் திகைத்தார். வார்த்தை தவறியது மறு விநாடியே அவனுக்குப் புரிந்து விட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள, “ஆமா. உப்புதான் கேட்டேன். கொண்டு வா!” என்றான் சர்வரிடம். அழகிக்கு ஆச்சரியம். காபியில் உப்பு போட்டு சாப்பிடுவதா? விசாரித்தாள். அவனோ உடனடி கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான். ”கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான். இப்ப டவுன்ல வசதியா இருந்தா லும் அப்பாவும் அம்மாவும் அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கிறாங்க. அவங்க நினைப்பும் ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக் கூடாதுங்கிறதால காபியில உப்பு போட்டுக்கறேன்!” அவனது பெற்றோர் பாசமும் ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது. அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்து கல்யாணமும் முடிந்தது. நாற்பது ஆண்டுகால தாம்பத்தியத்துக்குப் பிறகு அவன் இறந்துவிட, அவனது பெட்டியில் ஒரு கடிதத்தைக் கண்டாள் அவள்.”ஸாரி டார்லிங்! ஒரு பொய் சொல்லிவிட்டேன். நமது முதல் சந்திப்பின்போது காபிக்கு நான் உப்பு கேட்டது என் உளறல். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வாழ்க்கை முழுக்க நான் காபியில் உப்பு சேர்த்துக்கொண்டாலும். அன்று சொன்ன பொய் என்னை நெருடுகிறது!” பின் குறிப்பு: “நீ மட்டும் கிடைப்பதாக இருந்தால் அடுத்த ஜென்மத்திலும் உப்பு காபி சாப்பிட நான் தயார்!” பிறிதொரு நாள். அவள் காபியில் உப்பு சேர்த்துக்கொண்ட போது, “உப்பு கரிக்கலையா?” என்று கேட்டார் ஒருவர். ”இனிப்பாக இருக்கிறது!” என்றாள் அவள். சுவை என்பது நாக்கில் மட்டுமல்ல. மனதிலும் இருக்கிறது.

கதை #S950 ஒரு வரி புத்தகம் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர். ராஜா அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார், “அறிஞர் பெருமக்களே! உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்" அறிஞர்கள் கூடி தங்களுக்குள் விவாதித்து, பின்னர் ராஜாவிடம், " ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை" என்று கருத்துத் தெரிவித்தனர். மனம் மிக மகிழ்ந்த ராஜா, "அப்படியா! அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்” என்றார். அறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர். ராஜாவை அணுகிய அறிஞர்கள் குழு பெருமிதத்துடன், "அரசர் பெருமானே! அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்"என்று கூறி தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர். ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருந்த போதிலும் அவர் அறிஞர்களை நோக்கி, "உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன். என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும்? ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார். அறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி ராஜாவிடம் சமர்ப்பித்தனர். மகிழ்ந்து போன ராஜா மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார். "ஆனால் அறிஞர் பெருமக்களே! இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாத படி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அல்லவா! இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார். அறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து ராஜாவிடம் சமர்ப்பித்தனர். அதைப் படித்துப் பார்த்த ராஜா," ஆஹா, மிக மிக அற்புதம். என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே. உங்களால் முடியாதது ஒன்று உண்டா, என்ன?" அறிஞர்கள் குழு தீவிரமாக விவாதித்தது. இறுதியில் அறிஞர்கள் தங்கள் முடிவை ராஜாவிடம் ஒரு சிறிய ஓலை நறுக்கில் எழுதித் தந்தனர். அதைப் படித்துப் பார்த்த ராஜா துள்ளிக் குதித்தார். "இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன. எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த நீங்கள் சாரத்தை வடித்துத் தந்து விட்டீர்களே! இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்" என்று மகிந்து கூறி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் தேசமெங்கும் பறையறிவித்தான். அந்த வாசகம் என்ன தெரியுமா? "இலவசமாக உணவு கிடைக்காது" (There is no free lunch) என்பது தான் அந்த வாசகம்!

கதை #S949 ஞானிகளைப் பார்க்க ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம். மாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார். இந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள். வாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். “ஏன் வகுப்பில் தூங்கினீர்கள்?” என்று கேட்டார். மாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள்.

கதை #S948 ஓடக்காரன் ஒரு ஓடக்காரன் இருந்தான். ஆற்றைக் கடக்க கொள்ளைப் பணம் வசூலிப்பான். மக்கள் எல்லோரும் திட்டுவார்கள். அதையெல்லாம் அவன் கண்டு கொள்ள மாட்டான். மக்களும் வேறு வழியின்றி அவன் கேட்கிற பணத்தைக் கொடுத்து ஆற்றைக் கடந்து செல்வார்கள். அவனுக்கு அந்திமக் காலம் வந்தது. மக்கள் தூற்றினார்கள். இவனுக்கு நற்கதியே கிடைக்காது என்று. இறக்கும் தருவாயின் தன் மகனை அழைத்தான். "மகனே, நான் உயிரோடு இருக்கையில் செய்த செயல்களுக்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன். மக்கள் ஒருவரும் என்னை நல்லவிதமாகச் சொல்லியதே இல்லை. ஏச்சும் பேச்சும்தான் கேட்டிருக்கிறேன். இறந்த பின்னராவது மக்கள் என்னை நல்ல விதமாகப் பேசும்படி செய்." என்று கூறி உயிர்விட்டான். மகனும் யோசித்தான். தந்தை பார்த்த தொழிலையே அவனும் கைக்கொண்டு தந்தையை விட இரண்டு மடங்கு பணம் வசூலித்தான். இப்பொழுது மக்கள் சொன்னார்கள், "இவனுக்கு இவன் தந்தை எவ்வளவோ மேல். பாவம் புண்ணியவான் அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்.” நீங்க என்ன நீதி வேணா உணர்ந்துக்குங்க. ஆனா, நான் சொல்ற நீதியைச் சொல்லத்தான் போறேன். மக்கள் தங்கள் வசதிக்கேற்பதான் எதையும் பேசுவார்கள். நீதி நேர்மை என்பதெல்லாம் வெறும் பம்மாத்து.

கதை #S947 மேனேஜர் மேல் அன்பு அது ஓர் ஏற்றுமதி நிறுவனம். மேனேஜர் பயங்கரமான கோபக்காரர். தனக்குக் கீழே வேலை செய்கிறவர்களைக் கடித்துத் துப்பிவிடுவார். அந்தக் கம்பெனியில் இருக்கிற யாருக்கும் அந்த மேனேஜரை பிடிக்காது. ஆனால், அதை வெளிப்படையாக சொன்னால் சீட்டு கிழிந்துவிடுமே. வெறுப்பை உள்ளே மறைத்துக் கொண்டு, வெளியே சிரித்தபடி சுற்றிவந்தார்கள். பல வருடங்கள் கழிந்தன. அன்றைக்கு, அந்த மேனேஜருக்கு 58 வது பிறந்தநாள். கம்பெனி விதிமுறைகளின்படி அதேநாளில் அவர் ஓய்வு பெறுகிறார். இதை கேள்விப்பட்ட ஊழியர்கள் எல்லோருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. “ஒழிந்தான் கயவன்” என்று கொக்கரிக்காத குறையாக கொண்டாடினார்கள். அன்று மாலை. கோபக்கார மேனேஜருக்குப் பிரிவுபசார விழா. அதற்கு ஊழியர்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். “நாளைலேர்ந்து இந்தத் தடியனோட தொல்லை இருக்காதுடா சாமி. ரொம்ப நிம்மதி!” என்று உள்ளுக்குள் மகிழ்ந்தார்கள். ஆனால் வெளியே, “உங்களை மாதிரி ஒரு மேனேஜரை பார்க்கவே முடியாது சார். நீங்க இல்லாம இந்த கம்பெனி எப்படி நடக்கப் போகுதுன்னே தெரியலை” என்று பொய்யாக உருகினார்கள். இதையெல்லாம் அந்த விழாவுக்கு வந்திருந்த கம்பெனி முதலாளி பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியாக மேடையேறி அவர், “நீங்களெல்லாம் உங்க மேனேஜர் மேலே இவ்ளோ அன்பா இருப்பீங்கன்னு நான் கனவில கூட நினைக்கலை. உங்களோட கருத்துக்கு மதிப்பு தரலைன்னா நான் என்ன முதலாளி? நீங்க விரும்பினப்படி, இந்தத் திறமைசாலி மேனேஜரோட பதவிக்காலத்தை இன்னும் சில வருசங்களுக்கு நீட்டிக்கரதா முடிவு செஞ்சிருக்கேன்!” என்றார்.

கதை #S946 கால் தடங்கள் கடற்கரையில், ஒரு சிறு நண்டு தனது எட்டு கால்களையும் ஊன்றி நடந்துகொண்டிருந்தது. அது நடந்த ஒவ்வொரு அடியிலும், மணலில் ஆழமான தடங்கள் பதிந்தன. நண்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க நிறுத்தியபோது, திரும்பி பார்த்தால், தனது தடங்கள் அலைகளால் அழிக்கப்படுவதை கண்டது. "என்ன இது? நான் நடந்த இடமெல்லாம் மீண்டும் மணலாக மாறிவிடுகிறது!" நண்டு தன்னுள் குழம்பிக் கொண்டது. "நான் நடந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாமல் போய்விடுமே!" அடுத்த நாள், ஒரு நரி கடற்கரையின் ஓரத்தில் உணவு தேடி அலைந்தது. திடீரென்று, நண்டின் கால்தடத்தை கண்டது. "ஹா! இங்கே ஒரு நண்டு இருக்கிறது!" என்று மகிழ்ச்சியுடன் கத்திய நரி, நண்டை தேடி நண்டின் கால்தடத்தை ஒட்டியே வந்தது வளைக்கு அருகில் இருந்து, நண்டு நரியை ஒரு கண்ணால் கவனித்தது. அதே நேரத்தில், தன் கால்தடங்களை அலைகள் அழிப்பதையும் கவனித்தது. "அடடா! அலைகள் எனக்கு உதவுகின்றனவே!" நண்டுக்கு புரிந்தது. நரி தன்னை கண்டுபிடிக்க முடியாமல் தடுக்க, அலைகள் தன் கால்தடங்களை அழித்துக்கொண்டே இருந்தன. அருகில் நரி வருவதை பார்த்த நண்டு வேகமாக ஓடிச் சென்று வளைக்குள் ஒளிந்து தப்பித்துவிட்டது. பின்னர், தன்னை காப்பாற்றிய அலைகளுக்கு நன்றி தெரிவித்தது. "அலைகளே! நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு நன்றி. " என்று மனதார நன்றியுடன் முணுமுணுத்தது நண்டு.

கதை #S945 டாக்டரும் மெக்கானிக்கும் பிரபலமான டாக்டர் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் எடுத்து வந்தார். காரைப் பழுது பார்த்த மெக்கானிக், "டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன். நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன், பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன். அடைப்பை சரி செய்கிறேன். புதிய உதிரி பாகங்களைப் பொறுத்துகிறேன். அப்படி இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி அதிக பணம், புகழ்?" என்று கேட்டான். சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன், "நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்!" என்றார்.

கதை #S944 கன்று குட்டியாக இருக்கும்போதே ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது. எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர். ரொம்பவும் சுலபம் என்றான் அவன். எப்படி? என்றார்கள் மற்றவர்கள். இந்தப் பசு கன்றுக் குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகி விட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை என்றான்.

கதை #S943 மனதை உடைத்து விட்டால் ஒரு நாள் விஞ்ஞானியின் சோதனை வெற்றிபெற்றது. அவரது உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது விஞ்ஞானி, அலுவலகப் பையனை அழைத்தார். ”இந்த புதிய கண்டுபிடிப்பைச் சோதனை செய்” என்றார் விஞ்ஞானி. விஞ்ஞானி சொன்னவுடன் அவனுக்கு ஒரே பதற்றம். கண்டுபிடிப்பை வாங்கும் போதே தவறுதலாகக் கீழே போட்டு விட்டான். விஞ்ஞானிக்குக் கோபம் வந்தது. ஆனால், ஒன்றும் சொல்லவில்லை. விஞ்ஞானி தன்னை வேலையை விட்டு அனுப்பி விடுவார் என்று அந்தப் பையன் பயந்தான். விஞ்ஞானி மீண்டும் ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினார். மறுபடியும் அதே அலுவலகப் பையனை அழைத்தார். “இந்தப் கண்டுபிடிப்பையாவது சரியாக வாங்கிச் சோதனை செய்” என்று சொன்னார் விஞ்ஞானி. விஞ்ஞானியின் இந்தச் செயல் அவரது உதவியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்களுள் ஒருவர், ”ஏற்கெனவே ஒருமுறை கண்டுபிடிப்பை உடைத்து விட்டான், மீண்டும் அவனுக்கு எதற்கு வாய்ப்பு தர வேண்டும்?” என்று கேட்டார். இன்னொரு உதவியாளரோ, ”மீண்டும் அவன் கண்டுபிடிப்பை உடைத்து விட்டால் உங்கள் உழைப்பு வீணாகி விடாதா” என விஞ்ஞானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு விஞ்ஞானி பொறுமையாகப் பதில் கூறினார். “இந்தப் புதிய கண்டுபிடிப்பை உருவாக்குவதற்கு எனக்கு ஒரு நாள் தான் ஆனது. மீண்டும் அது கீழே விழுந்து உடைந்து விட்டால், ஒரே நாளில் என்னால் புதிதாக இன்னொரு கண்டுபிடிப்பை உருவாக்கி விட முடியும். ஆனால், இந்த வேலையை மறுபடி அவனிடம் ஒப்படைக்கா விட்டால், அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்துவிடுவான். அதை மீண்டும் அவ்வளவு எளிதாக அவனிடம் உருவாக்க முடியாது. அப்படி நடப்பதை நான் விரும்ப வில்லை” என்று சொன்னார்.

கதை #S942 பொறாமை கொண்டால் ஒருவரிடம் ஒரு கழுதையும் அழகான நாய்க்குட்டியும் இருந்தன. கழுதை வீட்டிற்கு வெளியே கொட்டிலில் கட்டப் பட்டிருக்கும். அதற்கு நிறையத் தீவன வகைகள் வழங்கப்படும். ஆனால், அந்த நாய்க்குட்டியோ வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வரும். அதற்கு நிறைய வித்தைகள் தெரியும். ஆகவே, எஜமானர் அந்த நாயிடம் அன்பாக இருந்தார். அதை விட்டு விட்டு அவர் சாப்பிடவே மாட்டார். அப்போதெல்லாம் அந்த நாய் துள்ளும், குதிக்கும், எஜமானரைக் கொஞ்சும் இதெல்லாம் பார்க்க அழகாக இருக்கும். அந்த நாயைப் பார்க்கிற போதெல்லாம் கழுதைக்குப் பொசு பொசு என்று இருக்கும். "தன் தலை எழுத்தை எண்ணிப் புலம்பும். "காட்டிலிருந்து விறகு கொண்டு வருவது நான்; செக்குச் சுற்றுவது நான்; தோட்டத்திலிருந்து விளைச்சலைச் சுமந்து வருவது நான். என்றைக்காவது வீட்டிற்குள் நுழைய முடிந்திருக்கிறதா? அந்த எஜமான் தான் அன்பாக ஒரு வார்த்தை பேசியதுண்டா?" எனப் பொருமும். இப்படியே பொருமிக் கொண்டிருந்த கழுதை ஒருநாள் கட்டுகளை முறித்துக் கொண்டு வீட்டிற்குள் பாய்ந்தது. கால்களை அப்படியும் இப்படியுமாகத் தூக்கிக் கொண்டு துள்ளியது; குதித்தது. அந்த நாய்க்குட்டி எஜமானர் மடியில் தவ்வி ஏறுவது போல் தாவ முயன்றது. அதனால் மேஜை உடைந்து அதிலிருந்து பாத்திரங்கள் கீழே விழுந்து நொறுங்கின. நாயைப் போல் முத்தம் கொடுக்க விரும்பி எஜமானின் முதுகுப் பக்கத்தில் எழும்பியது. அதற்குள், வீட்டிற்குள் கழுதை அட்டகாசம் செய்வதை அறிந்த வேலைக்காரர்கள் கழுதையிடமிருந்து எஜமானைக் காப்பாற்றினார்கள். சாட்டை, தடி ஆகியவற்றைக் கொண்டு கழுதையை அடித்து விரட்டிக் கொட்டிலில் கட்டி வைத்தார்கள். உயிர் போகிற மாதிரி அடித்துத் துவைத்தார்கள். "இதெல்லாம் என்னால் வந்த வினை. வழக்கம் போல உழைத்துக் கொண்டிருக்காமல் ஏன் நான் ஒன்றுக்கும் உதவாத சிறு நாய்க்குட்டி போல சோம்போறியாக இருக்க ஆசைப்பட்டேன்" என அது புலம்பியது. ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு, பெருமை இருக்கவே செய்கிறது. இதில் அவரைப் போல் இல்லையே இவரைப் போல் இல்லையே எனப் பொறாமை கொண்டால் இப்படித் தான்.

கதை #S941 பயிற்சி செய்யவில்லை என்றால் புகழ் பெற்ற பாடகர். அவர் புகழின் உச்சியில் இருந்த போதிலும் தினமும் 10 முதல் 12 மணி நேரம் பயிற்சி செய்வார். ஒரு முறை அவரது நிகழ்ச்சி முடிந்தப் பின்னர் அவரிடம் “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பாடகர், “ எனது வெற்றியின் ரகசியம் தினந்தோறும் பயிற்சி செய்வது தான். நான் ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றால் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய முடியும். நான் இரண்டு நாட்கள் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை எனது விமர்சகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். நான் மூன்று நாட்களுக்கு மேல் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று கூறினார். எந்தத் துறையிலும் ஒருவர் வெற்றி ஆளராகத் திகழ வேண்டுமானால், அவர் தனது பணியில் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் அவரால் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். எதிலும் முயற்சியும், முறையான பயிற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால், ஒருவரது மன ஆற்றல் அதிகரித்து, அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது நிச்சயம்!